என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன் - உஸ்மான் கவாஜா!

Updated: Sun, Jun 18 2023 12:01 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நிலவும் நிறவெறியை தோலுரித்துக் காட்டியவர் உஸ்மான் கவாஜா. சிறப்பாக ஆடிய போதும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அண்மைக் காலங்களில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து என்று ஆஸ்திரேலிய அணி எங்கெல்லாம் திணறியதோ அங்கெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

2022ஆம் ஆண்டு முதல் மொத்தமாக உஸ்மான் கவாஜா 7 சதங்களை விளாசி அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து 2ஆவது போட்டியுடன் கவாஜா நீக்கப்பட்டிருந்தார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே கவாஜா சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2ஆம் நாள் முழுக்க பேட்டிங் செய்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் சதம் விளாசிய பின் உஸ்மான் கவாஜா தனது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், “நான் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது என்னால் ரன்கள் சேர்க்க முடியாது என்ற குரல்கள் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து அதிகமாக எழுந்தன. அதனாலேயே இந்த சதம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாக உள்ளது. என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை தான். ஆனால் என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன்.

 

சதம் விளாசிய பின்னர் கொண்டாடிய போது எதற்காக பேட்டை தூக்கி வீசினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அதுதான் நான். முதல் நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது ஆச்சரியமாகவும், சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது. இப்போது ஏன் மக்களை இங்கிலாந்து அணியின் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எப்படி வெற்றிபெறுகிறோம் என்பது பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஓவர்கள் 3 ரன்கள் அடித்தாலும் சரி, 6 ரன்கள் விளாசினாலும் சரி.. எல்லாமே ஒன்றுதான். அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை