பகலிரவு டெஸ்ட்: ரூட், மாலன் நிதானத்தில் தப்பித்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 473 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதில் மார்னஸ் லபுசாக்னே 103 ரன்களையும், டேவிட் வார்னர் 95 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 14 ரன்களுக்குள்ளாகவே பர்ன்ஸ், ஹமீத் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட் - டேவிட் மாலன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர்.
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ரூட் 57 ரன்களுடனும், மாலன் 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இருப்பினும் இங்கிலாந்து அணி 333 ரன்கள் பின் தங்கி உள்ளதால் ஃபாலோ ஆனை தவிர்க்கவே அதிக முயற்சி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.