பாக்ஸிங் டே டெஸ்ட்: 267 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 185 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 50 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்களுடனும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 124 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடர்ந்தது.
இதில் மார்கஸ் ஹாரிஸ் அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றது. இறுதியில் 87.5 ஓவர்களில் 267 ரன்களைச் சேர்த்திருந்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.