பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து பரிதாபம்; வார்னரை இழந்தது ஆஸி.!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் 65.1 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 50 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ், நாதன் லையன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்களுடனும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 124 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்தை தொடரவுள்ளது.