மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; 4-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது!

Updated: Sun, Jan 16 2022 22:27 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. அந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அதன்பின்னர் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது.

சிட்னியில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணி முன்பே 3-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது. இந்த தொடர் முழுவதுமாகவே பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் படுமோசமாக ஆடி படுதோல்விகள் அடைந்த இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கியது.

ஹோபர்ட்டில் நடந்த இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபாரமான சதத்தால் (101) முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் 115 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 155 ரன்கள் அடித்தது. இதையடுத்து மொத்தமாக 270 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 271 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து 271 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சால் 124 ரன்களுக்கே சுருண்டது. இதில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், கமரூன் க்ரீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம்  146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்த டெஸ்ட்டிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 4-0 என ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாகவும் ட்ராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை