வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 425 ரன்களையும் சேர்த்தது. அதன்பின் 278 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
அதன்படி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேப்டன் ஜோ ரூட் 84 ரன்களுடனும், டேவிட் மாலன் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் ஒரே ஆண்டில் 1500 டெஸ்ட் ரன்களையும் கடந்தார். மேலும் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் 19 ஆண்டுகால சாதனையையும் முறியடித்து அசத்தினார்.
முன்னதாக மைக்கேல் வாகன் ஒரே ஆண்டில் 1,481 ரன்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது ஜோ ரூட் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.