ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியை சேர்ந்த நால்வருக்கு கரோனா!

Updated: Mon, Dec 27 2021 13:05 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட், மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அணியின் இரு பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வருவதற்கு முன்பு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதியான பிறகு அரை மணி நேரமாக தாமதமாக 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டம் முடிந்த பிறகு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

கோவிட் 19 ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்நிலைமையை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் எம்சிசியும் கவனித்து வருகிறது. விக்டோரியன் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 26 அன்று 57,818 பேரைப் பரிசோதித்ததில் 1999 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விக்டோரிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதவிர, சேனல் செவன் தொலைக்காட்சி வர்ணனைக் குழுவிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வர்ணனைக் குழுவில் உள்ள ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரிக்கி பாண்டிங், இயன் போத்தம் என வர்ணனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பரிசோதனை முடிவில் கரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே மீண்டும் வர்ணனை செய்ய வருவார்கள். இதையடுத்து வேறொரு வர்ணனைக் குழு களத்தில் இறங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை