‘முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்; ஆனால் அதற்கு அவர் இதனை செய்ய வேண்டும்’

Updated: Sat, May 29 2021 12:42 IST
Image Source: Google

டெஸ்ட் கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் புது புது சாதனைகள் படைக்கப்பட்டும், பின்னர் அது தகர்க்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

தற்போது வரை இவரது சாதனையை எந்த ஒரு பந்து வீச்சாளரும் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் இவரது சாதனையை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தகர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹக், ரவிச்சந்திரன் அஸ்வின் 42 வயது வரை டெஸ்டில் விளையாடினால் 800 விக்கெட்கள் சாதனையை தகர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர்,“ஒருவேளை அஸ்வின் 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் அவரால் நிச்சயம் 600+ விக்கெட்களை எடுக்க முடியும். மேலும், முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையையும் தகர்க்க முடியும். அஸ்வின் போகப்போக பேட்டிங்கில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஆனால், பந்துவீச்சைப் பொறுத்தவரை அவர் இன்னும் மேம்பட்டவராக இருப்பார்.

அஸ்வின் தற்போதுவரை தலைசிறந்த ஸ்பின்னராக செயல்பட ஒரு காரணம் இருக்கிறது. அவர் கவுண்டி கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அனுபவம் கொண்டவர். இந்திய காலநிலையில் விளையாடி விட்டு, உடனே இங்கிலாந்து சென்று இத்தொடரில் பங்கேற்று விளையாடுவார். இதனால், ஒரு கால நிலையில் இருந்து, மற்றொரு கால நிலைக்கு தாவி விளையாடிப் பழக்கப்பட்டவர். இவரால் எப்படிப்பட்ட காலநிலையையும் சுலபமாக சமாளித்து பந்து வீச முடியும்” என தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போதுவரை 78 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 409 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை கைப்பற்றிய நான்காவது வீரராகவும் இவர் இருக்கிறார். அனில் கும்ப்ளே, கபில் தேவ், ஹர்பஜன் சிங் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை