ஆசிய கோப்பை 2022: ஆஃப்கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அந்த அணியின் முன் வரிசை வீரர்கள் அனாமுல் ஹக், முகமது நைம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹ்மான், அஃபிஃப் ஹொசைன், பின் அதிரடியாக விளையாடி வந்த மஹ்மதுல்லா ஆகியோர் ரஷித் கானின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மொசடெக் ஹொசைன் கடைசி வரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொசடெக் ஹொசைன் 48 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.