ஆசிய கோப்பை 2022: ராஜபக்ஷ, ஹசரங்கா காட்டடி; பாகிஸ்தானுக்கு 171 டார்கெட்!

Updated: Sun, Sep 11 2022 21:21 IST
Asia Cup 2022 Final: Bhanuka Rajapaksa's fifty helps Sri Lanka post a total on 170/6
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றி நசீம் ஷா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய பதும் நிஷங்கா, குணத்திலகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 28 ரன்களோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷானகா 2 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ஷா - வநிந்து ஹசரங்கா இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராஜபக்ஷா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பனுகா ராஜபக்ஷா 71 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை