ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இதில் இன்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி தான் அந்த அணியின் நட்சத்திர மற்றும் அபாயகரமான வீரர்கள். இந்த ஜோடியை தொடக்கத்திலேயே பிரிப்பதில் உறுதியாக இருந்தது இந்திய அணி.
இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ரன்னே விட்டுக்கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார். அதன்விளைவாக புவனேஷ்வர் குமார் வீசிய 3ஆவது ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த முகமது ரிஸ்வான் கடைசி வரை விளையாடி பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்பதற்காக நிதானமாக ஆடினார். புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், ஜடேஜா அனைவருமே கட்டுக்கோப்புடன் வீசியதால் வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய முகமது ரிஸ்வான் 43 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குஷ்தில் ஷாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷதாப் கான் 10, ஆசிஃப் ஆலி 9, நசீம் ஷா 0 ஆகிய மூவரையும் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடைசியில் ஷாநவாஸ் தஹானி, 6 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் அடிக்க, 19.5 ஓவரில் 147 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கேஎல் ராகுல் சந்தித்த முதல் பந்திலேயே அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா விடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேப்டன் ரோஹித் சர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக ஸ்கோரை உயர்த்தினர். பின் 10 ரன்களில் ரோஹித் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் 35 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நவாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாட முயற்சித்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - ஹர்திக் பாண்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் 50 ரன்களைப் பார்ட்னர்ஷிப் முறையிலும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பின்னர் 35 ரன்களை எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா 35 ரன்களைச் சேர்த்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதன்மூலம் 19.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.