ஆசிய கோப்பை 2022: பாபர் ஆசாம் தலமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Wed, Aug 03 2022 15:38 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 

இந்நிலையில் 2022 ஆண்டிற்கான ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 31 அன்று தகுதிச்சுற்றில் இடம்பிடித்த அணியுடன் இந்தியா மோதுகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. 

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. 

ஆசியக் கோப்பை டி20 போட்டி மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளில் இருந்தும் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார். 

தற்போது 28 வயதாகும் ஹசன் அலி, பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்டுகள், 60 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் விளையாடாத நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபக்கார் ஸமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்திகார் அஹமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முஹமது ரிஸ்வான், முஹமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை