ஆசிய கோப்பை 2022: சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. அதற்கு அடுத்து நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த ஹாங்காங் அணிக்கு எதிரான வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் இந்த போட்டியில் எங்களது பேட்டிங்கினை மிகச் சிறப்பாக துவங்கினோம். அதனால் எங்களால் பெரிய ஸ்கோரை அடிக்க முடிந்தது. அதன் பின்னர் பந்துவீச வந்த போதும் டீசண்டாக பந்து வீசி வெற்றியினை பெற்றோம். ஹாங்காங் அணி வீரர்களும் பிரமாதமாகவே விளையாடினர்.
இந்த போட்டியில் சூரிய குமாரின் ஆட்டம் பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை. அந்த அளவிற்கு பிரமாதமாக இருந்தது. அவர் விளையாடிய ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. பயமின்றி விளையாடும் இவரை போன்ற ஒரு வீரர் தான் அணிக்கு தேவை. அந்த வகையில் இன்று மைதானம் முழுவதும் மிகச் சிறப்பான ஷாட்களை அவர் அடித்தார்.
இந்திய அணியில் தற்போதுள்ள வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் இறங்கி விளையாடும் அளவிற்கு தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளனர். இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.