ஆகஸ்ட் 31-இல் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது.
மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது.
ஆனால் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதற்கெல்லாம் அசரவில்லை. பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது.
ஆனால் அதற்கு இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்தத் தொடரை பொறுத்தவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நோபாளம் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் லீக் போட்டிகள் முடிவில் 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.