இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே, ஆனால் ஃபீல்டிங் மிக மோசம் - ரோஹித் சர்மா!
இந்தியா அணி நேற்று ஆசியக் கோப்பையில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது சுற்று தகுதி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய இந்திய அணி 48.2 ஓவரில் 230 ரன்களுக்கு நேபாள அணியை ஆல் அவுட் செய்தது. பந்துவீச்சில் இவ்வளவு தூரம் இழுக்க வேண்டிய சூழ்நிலை, இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்த காரணத்தினால் வந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு குறிப்பாக இந்திய துவக்க ஆட்டக்காரர்களுக்கு நல்ல ஒரு பேட்டிங் பயிற்சியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மழையின் நடுவே கவனத்தை இழந்து சீக்கிரத்தில் வெளியேறியதற்கு இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 59 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 74 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 62 பந்தில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுக்க, 20 ஓவரில் இந்திய அணி டக்வோர்த் லுவிஸ் விதிப்படி 145 ரன்களுக்கு 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுக்வையில் “பேட்டிங்கை தொடங்கும்போது கொஞ்சம் பதட்டம் இருக்கவே செய்தது. பின்பு நிலைமை சரியானதும் அணியை வெற்றி பெற வைக்க கொண்டு செல்ல முடிவு செய்தேன். நான் லெக் சைடில் தட்டிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க நினைக்கவில்லை, ஷாட் பைன் லெக் திசையில் ஸ்வீப் செய்யவே நினைத்தேன். ஆனால் இன்றைய பேட்கள் சிறப்பாக இருப்பதனால், அது சிக்ஸராக மாறியது.
நாங்கள் இங்கு வந்த பொழுதே எங்களுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்று தெரியும். ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவுதான். விளையாடிய இந்த இரண்டு போட்டிகளை வைத்து நாங்கள் அதிகம் எதையும் பார்க்க முடியாது. அதிர்ஷ்டவசமாக முதல் போட்டியில் பேட்டிங் செய்யவும் இரண்டாவது போட்டியில் பந்து வீசவும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த இரண்டு போட்டியின் செயல்பாடுகள் எங்களுடைய சிறந்தது கிடையாது. ஆனால் எங்களுடைய அணியில் சில வீரர்கள் சில மாதங்களுக்கு பிறகு விளையாட வந்திருக்கிறார்கள். முதல் போட்டி அழுத்தத்தின் கீழ் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் சிறப்பாக பேட் செய்தார்கள். இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே. ஆனால் ஃபீல்டிங் மிக மோசம்” என்று தெரிவித்தார்.