வெல்லாலகே முக்கிய வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் - லசித் மலிங்கா பாராட்டு!

Updated: Wed, Sep 13 2023 15:38 IST
Image Source: Google

இலங்கை அணி ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பரபரப்பான நிலையில் இருந்து தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வங்கதேச அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. தற்பொழுது இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார் என்பதை முடிவு செய்யும் போட்டியாக இலங்கை பாகிஸ்தான் நாளை மோதிக் கொள்ளும் போட்டி அமையும். அதே சமயத்தில் மழை அச்சுறுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது.

நேற்றைய போட்டியில் 11 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் வெகு சாதாரணமாக இலங்கையின் பந்து வீச்சை நொறுக்கி 80 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி குறைந்தபட்சம் 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 12ஆவது ஓவரை வீச வந்த, இலங்கை அணியின் 20 வயதான இளம் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என ஐந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை ஒரே அடியாக சரித்தார்.

இதற்கடுத்து இலங்கை அணி இலக்கை நோக்கி மிகவும் தடுமாற்றத்துடன் விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பேட்டிங் செய்ய வந்த வெல்லாலகே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 46 பந்தில் 42 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நம்பிக்கை அளித்தார்.

இந்த இளம் வீரர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்த போதும் ஆட்டநாயகன் விருது தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று இவரது ஆட்டம் குறித்து பாராட்டி உள்ள லசித் மலிங்கா, “இன்று இலங்கை 12 வீரர்களுடன் விளையாடியது என்று கூறினால் சரியாக இருக்கும். துனித் மிகச் சிறப்பான வீரர். அவர் திறமையான ஆல் ரவுண்டர். பொறுப்புகளை தாங்கும் திறமையை கொண்டவராக இருக்கிறார். அவர் அணியின் முக்கியமான வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகள் இலங்கை கிரிக்கெட்டுகாக அவர் விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை