ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!

Updated: Tue, Mar 21 2023 12:59 IST
Asia Cup 2023: Shahid Afridi to request the Indian prime minister Narendra Modi! (Image Source: Google)

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்தடுத்து பிரச்சினைகள் வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடத்தப்படுகிறது என்ற பிரச்சினை மட்டும் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தான் வைத்துள்ளது. ஆனால் அங்கு இந்திய அணி செல்லாது எனவும், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும் ஜெய் ஷா கூறினார். இதற்காக சமீபத்தில் ஆசிய கவுன்சில் கூட்டம் ஒன்று நடந்தது. 

அதில், பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வராது என அந்நாட்டு வாரியம் தடாலடியாக அறிவித்தது. ஒருபுறம் பாகிஸ்தானில் இருந்து அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ-ம் மற்றொருபுறம் இந்தியா வந்தே தீர வேண்டும் என பாகிஸ்தானும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்திய பிரதமருக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “இரு நாட்டு அணிகளும் ஒன்றாக சேர்ந்து விளையாட பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானில் தற்போது எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது. பல நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. ஒருமுறை இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது,என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பாகிஸ்தான் அரசு எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. எனவே மிரட்டல்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இரு நாட்டு அணிகளின் ஒற்றுமைக்காக போட்டியை நடத்தவிட வேண்டும்.

இந்திய வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு வந்தால், சிறப்பான மரியாதையுடன் வரவேற்போம். அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வோம். இந்த தலைமுறையினர் சண்டை, போர்களை விரும்புவதில்லை. இந்தியாவுடன் விளையாடும் போதெல்லாம் பெரும் மகிழ்ச்சியுடன் ஆடுகிறோம். 2005 இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும்போது ஹர்பஜன் சிங், யுவ்ராஜ் சிங் ஆகியோர் பல கடைகளுக்கும் ஷாப்பிங் சென்றனர். உணவகங்களுக்கு சென்றனர். ஆனால் யாருமே அவர்களிடம் பணம் வாங்கவில்லை. இந்திய வீரர்கள் மீது அவ்வளவு அன்பு வைத்துள்ளனர்” என கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை பிரச்சனை குறித்து மீண்டும் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மற்ற ஆசிய நாடுகளின் ஆதரவுகளை பாகிஸ்தான் வாரியம் கேட்டு வருகின்றன. எனினும் பிசிசிஐ தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் இருக்கிறது. இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை