பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கிரக்கெட் வர்ணணையாளரிடம் பேசிய ரோஹித் சர்மா, தாங்களும் பந்துவீச தான் இருந்தோம் என்று கூறினார்.
தற்போது பேட்டிங் செய்வதால் தொடக்கம் முதலேயே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ரோஹித் சர்மா கூறினார். கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு காரணமே ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததால் தான். இதே போன்று ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றிலும் கேஎல் ராகுல் கோல்டன் டக்காகி வெளியேறினார். இதனால் இந்த ஜோடி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
ரோஹித் சர்மாவும் தனது கேப்டன் பதவியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ், ஒரு படி மேல் போய் ரோஹித் சர்மா குழப்பமாக காணப்படுகிறார், பயப்படுகிறார் போன்ற கருத்தை கூறினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். தனது டிரேட் மார்க் ஷாட்களை ரோகித் சர்மா அடிக்க தொடங்கியதும் ராக்கெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. மறுமுனையில் கேஎல் ராகுலும் தனது பழைய அதிரடியை காட்ட, பாகிஸ்தான் வீரர்கள் பதற தொடங்கினர். இதன் மூலம், இந்திய அணி 4.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது. ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்த நிலையில், பந்தை தூக்கி அடிக்க கேட்ச் ஆனது. அப்போது வழக்கம் போல் ஒரு கேட்ச் பிடிக்க 2 வீரர்கள் ஓடினர். அப்போது ஃபக்கர் ஸமான் பந்தை பிடிக்கிறேன் என்ற பெயரில், குஷ்தில் ஷாவுக்கு எடஞ்சல் தர, எப்படியோ குஷ்தில்ஷா பிடித்துவிட்டார்.
அதன்பின் மறுமுனையில் 28 ரன்களைச் சேர்த்திருந்த கேஎல் ராகுலும், சதாப் கான் பந்துவீச்சில் பவுண்டரி விளாச முயற்சித்து முகமது நவாஸிட கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.