ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை; உறுதிசெய்த கங்குலி!
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் கலந்துகொண்டு விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது.
கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண சூழ்நிலையால், தங்களால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடர் எங்கு நடக்கும் என்பது சந்தேகமாக இருந்தது. ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வங்கதேசத்தில் நடத்தப்படலாம் என்று தெரிந்தது. ஆனால் எங்கு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அமீரகத்தில் தான் மழை இருக்காது. அதனால் அங்கு நடத்தப்படவுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.