இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் என ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த ஆறு போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து ஆடுகளத்தில் ஒரு தொடக்க பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கில், ‘‘ஒரு தொடக்க வீரராக, இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும், ஒரே நாளில் விளையாடப்படும் மூன்று செக்ஷன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செக்ஷன்களில் விளையாடுவது முக்கியமானது.
இங்கிலாந்தில் பார்த்தீர்கள் என்றால், எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்குமோ, அப்போதெல்லாம் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். அதேசயம் வெயில் அடிக்கும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தொடக்க வீரர் இந்த சூழ்நிலையை மதிப்பிடுவது அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில், சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்திய அணியின் தொடக்க வீரர் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.