நோர்ட்ஜேவை தாக்கிய ஸ்பைடர் கேம்; வைரல் காணொளி!
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் வாட்டிவதைத்த வெயிலோடு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவு குடைச்சல் கொடுத்தவர், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே தான்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 47ஆவது ஓவரின் போது, பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் அந்தரத்தில் சுழன்று வரும் ஸ்பைடர் கேமரா தாக்கியது. இடது தோள்பட்டையில் கேமரா பலமாக இடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
வலியால் அவதிப்பட்ட நோர்ட்ஜேவுக்கு நல்லவேளையாக பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. 16 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு விக்கெட் எடுத்தார். கேமரா ஆப்ரேட்டரின் தவறினால் கேமரா அவர் மீது மோதி விட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. அத்துடன் மேற்கொண்டு அந்த கேமரா நேற்றைய போட்டியில் பயன்படுத்தப்படவில்லை. 3ஆவது நாளில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களுடன் கேமரா இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய நோர்ட்ஜே,'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எது என்னை தாக்கியது என்பது முதலில் தெரியாது. முழங்கையில் தான் கொஞ்சம் வீக்கம்இருக்கிறது. மற்றபடி பரவாயில்லை. ஸ்பைடர் கேமரா, வீரர்களின் தலை உயரத்துக்கு பயணிப்பது சரியில்லை என்பதே எனது கருத்து. சக வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் மிகவும் உயரமான வீரர். இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.