AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுசாக்னேவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் மார்னஸ் லபுசாக்னே சதமடித்தார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். இருவரும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது.
இதையடுத்து லபுசாக்னே 154 ரன்களுடனும், ஸ்மித் 59 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பந்தாடினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து மறுபக்கம் அபாரமாக விளையாடிய மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 20 பவுண்டரி, ஒரு சிக்சர் என 204 ரன்கள் எடுத்த நிலையில் மார்னஸ் லபுசாக்னே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 114 ரன்களுடன் களத்தில் உள்ளார்.