AUS vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளூம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை களமிறங்கினர். இன்னிங்ஸின் முதல் பந்து முதலே இருவரும் போட்டி போட்டு பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயத்தினர்.
இதன்மூலம் ஜோஸ் பட்லர் 25 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. பின் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசியிருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் 18 மாதங்களுக்குப் பின் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 12 ரன்களோடும், சாம் கரண் இரண்டு ரன்களோடும், மொயின் அலி 10 ரன்களோடும் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.