பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை பொட்டலங்கட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, ஆட்டம் தொடங்கியவுடன் மார்க் வுட் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். டெயிலண்டர்களுடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜானி பேர்ஸ்டோவ், மிட்செல் ஸ்டார்க் பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஒல்லி ராபின்சன் மற்றும் ஜேக் லீச் சற்று அதிரடி காட்டி ஓரளவு ஸ்கோரை உயர்த்தினர். எனினும், இங்கிலாந்து அணியால் 200 ரன்களை எட்ட முடியவில்லை.
இதனால் 65.1 ஓவரில் அந்த அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், ஸ்காட் போலந்து மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 53 ரன்களைச் சேர்த்துள்ளது.