AUS vs PAK, 2nd T20I: ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்; தொடரை வென்று ஆஸி அசத்தல்!

Updated: Sat, Nov 16 2024 17:26 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது. 

இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 

இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என ஹாரிஸ் ராவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட்டும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டொய்னிஸ் 14 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல்லும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து டிம் டேவிட்டும் 18 ரன்களுடனும், சேவியர் பார்ட்லெட் 5 ரன்னிலும், ஆரோன் ஹார்டி 24 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஃபர்ஹான் 5 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 16 ரன்னிலும், ஆகா சல்மான் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணி 44 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த உஸ்மான் கான் - இர்ஃபான் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் நம்பிக்கை கொடுத்தார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் உஸ்மான் கான் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அப்பாஸ் அப்ஃப்ரிடி 4 ரன்களிலும்ம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் கைவம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் 41 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

பின் இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை நாதன் எல்லிஸ் வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட இர்ஃபான் கான் 17 ரன்களைச் சேர்த்து எதிரணி மீது அழுத்தத்தை அதிகரித்தார். அனால் அடுத்த ஓவரில் பாகிஸ்தான் அணியால் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. ஆனால் இறுதியில் 37 ரன்களைச் சேர்த்த நிலையில் இர்ஃபான் கான் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை