AUS vs PAK, 3rd Test: ஆஸ்திரேலியா தடுமாற்றம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!

Updated: Thu, Jan 04 2024 12:36 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இது டேவிட் வார்னரி கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், அமர் ஜமால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்தது. 

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை டேவிட் வார்னர் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 34 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 47 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் 47 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்ட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 116 ரன்களை எடுத்துள்ளது. இதில் லபுஷாக்னே 23 ரன்களுடனும், ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அமர் ஜமால், அகா சல்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை