ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, சமீரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, கமில் மிஸ்ரா, சரித் அசலங்கா, ஜனித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் தசுன் ஷான்கா 35 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இத்தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.