வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 289 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடித்தது.
இதன்மூலம் 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களை மட்டுமே எடுத்து இன்னிங்ஸை முடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாட, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதில் கேமரூன் க்ரீன் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஷமார் ஜோசப்பின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகள இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி அணியை வெற்றிபெற செய்த ஷமார் ஜோசப் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காமின்ஸ், “இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது. ஷமார் ஜோசப் தனது அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி எங்களை கட்டுப்படுத்தியுள்ளார். அதேசமயம் நாங்களும் பேட்டிங்கில் சரிவர செயல்படாமல் இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் விளையாடினோம். ஏனெனில் நேற்றைய தினம் நாங்கள் வெஸ்ட் இண்டிஸ் அணியை 216 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்ததால் இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றியைப் பதிவுசெய்வோம் என்று நினைத்தேன். எங்கள் அணியில் ஸ்டீவ் ஸ்மித் தனி ஆளாக நின்று எங்களை வெற்றி வரை அழைத்து சென்றார்.
நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இதுபோன்ற தோல்வி உடனடியாக உங்களை கீழே தள்ளிவிடும். அதனால் நீங்கள் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் மிகவும் நன்றாக விளையாடினார். 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது ஒரு நியாயமான முடிவாக நான் பார்க்கிறேன்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் அடுத்ததாக நாங்கள் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம். எந்தவொரு வெளிநாட்டு சுற்றுப்பயணமும் கடினமாக ஒன்றாக தான் இருக்கும். ஆனால் அத்தொடருக்காக நாங்கள் எங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.