AUS vs WI, 2nd Test: லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை களமிறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதற்கிடையில் உஸ்மான் கவாஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, லபுசாக்னேவும் அரைசதம் கடந்தார். அதன்பின் 62 ரன்கள் எடுத்திருந்த கவாஜா ஆட்டமிழந்து வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 8 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதுமின்றி ஜேசன் ஹோல்டன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த வருடத்தில் அவரது எட்டாவது டக் அவுட் இதுவாகும்.
அதனைத் தொடர்ந்து லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இந்த தொடரில் அவர் விளையாடி மூன்று இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியுள்ளார். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.
இவர் ஒருபுறம் ரன்களை குவித்து வர மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட்டும் தனது 5ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது.
இதில் மார்னஸ் லபுசாக்னே 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர், டெவான் தாமஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.