AUSW vs INDW: மழையால் மீண்டும் ஆட்டம் ரத்து; வலிமையான நிலையில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் குயின்ஸ்லேண்டில் நேற்று தொடங்கியது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாளன்று மழை பெய்ததால் ஆட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இந்திய மகளிர் அணி 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. மந்தனா 80, பூனம் ராவத் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்தார் மந்தனா. 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைத்தார். மேலும், வெளிநாடுகளில் சதமடித்த 5ஆவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் மந்தனா பெற்றார். பிறகு 127 ரன்களில் கார்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நன்கு விளையாடி வந்த பூனம் ராவத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பேட்டில் பந்து உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் சென்றதாக நினைத்து நடுவர் அவுட் கொடுக்காத போதும் ஓய்வறைக்குத் திரும்பினார் பூனம் ராவத். ஆஸி. அணிக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாததால் நடுவரின் தீர்ப்பின்படி பூனம் ராவத்தால் தொடர்ந்து விளையாடியிருக்க முடியும். இருந்தும் பேட்டில் பந்து உரசியதாக அவர் எண்ணியதால் நடுவரின் முடிவுக்குக் காத்திருக்காமல் உடனடியாகக் கிளம்பிச் சென்றார். பூனம் ராவத்தின் இந்தச் செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
அதன்பின் 2ஆம் நாள் முதல் பகுதியில் இந்திய அணி 84 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 15, யாஸ்திகா பாட்டியா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதன்பிறகு யாஷ்திகா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 86 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் எடுத்த மிதாலி ராஜ் ரன் அவுட் ஆனார்.
101.5 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழையால் ஆட்டத்தை மீண்டும் தொடர முடியாமல் போனது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் படி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா - தனியா பாட்டியா ஆகியோர் களத்தில் உள்ளனர்.