AUSW vs INDW, 1st ODI: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Updated: Thu, Dec 05 2024 14:59 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரிய புனியா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியா புனியா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்னில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 19 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - ஹர்லீன் தியோல் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹர்லீன் தியோல் 19 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதற்கடுத்து 17 ரன்களை எடுத்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 24 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிச்சா கோஷும் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஷாட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் எல்லி பெர்ரி, பெத் மூனி, அனபெல் சத்ர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் அகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜிய வோல் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேகன் ஷட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை