டி20: ஃபின்ச் அதிரடியில் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா!

Updated: Fri, Mar 05 2021 18:04 IST
Image Source: Google

நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 5) வெலிங்டனில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் வழக்கம் போல சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர்கள் ஜோஷ் பிலிப்பே, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். 

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஆரோன் ஃபின்ச் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 79 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர்களான மார்டின் கப்தில் (7), டிம் செஃபெர்ட் (19), கேப்டன் வில்லியம்சன் (8), கிளென் பிலிப்ஸ் (1), ஜிம்மி நீஷம் (3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் 18.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை (மார்ச் 6) வெலிங்டனில் நடைபெறுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை