டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தும் - ரிக்கி பாண்டிங்!
இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இந்த வருட டி20 உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடைசி டி20 கோப்பையினை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு அதே நாட்டில் இம்முறை நடப்பதால் சாதகமான சூழ்நிலை நிலவும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளம் பற்றி எனக்கு தெரியும். கடினமான அந்த ஆடுகளத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினர்.
தற்போது இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. எனக்கு தெரிந்து 3 அணிகளுக்கு பெரிய அளவிலான போட்டி இருக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் போட்டி கடுமையானதாக இருக்கும். ஏனெனின் அதிகமான ஆட்ட நாயகர்கள் இந்த அணிகளில்தான் இருக்கிறார்கள்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கூட நன்றாக விளையாடுகின்றனர். அவர்களுக்கு டி20 சாதகமான களம். இருப்பினும் அவர்கள் ஆட்டத்தை எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்தே இந்த உலக கோப்பை முடிவுகள் இருக்கும்.
என்னைப் பொருத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். அதில் ஆரோன் பின்ச் தலைமையிலான அணி ரோஹித் சர்மா அணியினை வென்று கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.