AUS vs WI, 2nd Test: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Dec 11 2022 19:53 IST
Australia Complete West Indies Sweep To Close In On World Test Championship Final (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் ஆடியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். லபுஷேன் - ஹெட் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு லபுஷேன் - ஹெட் ஜோடி 297 ரன்களை குவித்தது.  லபுஷேன் 163 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களுக்கும் ஆட்டமிழந்து இருவருமே இரட்டை சதத்தை தவறவிட்டனர். 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராத்வெயிட் 19, ஷமர் ப்ரூக்ஸ் 8, ஜெர்மைன் பிளாக்வுட் 3 ஆகியோர் ஏமாற்றமளித்தனர். 47 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த சந்தர்பாலும் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆண்டர்சன் ஃபிலிப் 43 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ரோஸ்டான் சேஸ் 34 ரன்களும், ஜோஷுவா ட சில்வா 23 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 214 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டானது.

297 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. எனவே மொத்தமாக 496 ரன்கள் முன்னிலை பெற்று, 497 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது.

497 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவிடம் சீட்டுக்கட்டாய் சரிய வெறும் 77 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நேசர், ஸ்காட் பாண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை