AUS vs WI, 1st Test: விண்டீஸை 188 ரன்களில் சுருட்டியது ஆஸி; ஸ்மித் ஏமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அடிலெய்ட் நகரில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் எதிர்பார்த்தது போலவே தரமான ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 50 ரன்களும் 11ஆவது இடத்தில் களமிறங்கிய அறிமுக வீரர் சமர் ஜோசப் முக்கியமான 36 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4, ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்களை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கினார். தம்முடைய கேரியரை ஸ்பின் பவுலராக தொடங்கிய அவர் ஆரம்ப காலங்களில் 9ஆவது இடத்தில் விளையாடினார்.
ஆனால் அதன் பின் பேட்ஸ்மேனாக மாறிய அவர் பெரும்பாலும் 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்து விராட் கோலி போன்ற வீரர்களுக்கு நிகராக அபாரமாக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமீபத்திய பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக இந்த தொடரில் ஓப்பனிங்கில் களமிறங்கிய அவர் அதிரடியாக விளையாடாமல் வழக்கம் போல மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இருப்பினும் அறிமுக வீரர் சமர் ஜோசப் வீசிய 9ஆவது ஓவரின் முதல் பந்தை தவறாக கணித்த அவர் மிகப்பெரிய எட்ஜ் கொடுத்து 12 ரன்களில் அவுட்டாகி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய முதல் இன்னிங்சிலேயே ஏமாற்றத்துடன் சென்றார். மறுபுறம் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் போன்ற மகத்தான பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து அற்புதமான தொடக்கத்தை பெற்ற சமர் ஜோசப் அடுத்த சில ஓவர்களில் மற்றொரு நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னேவை 10 ரன்களில் அவுட்டாக்கினார்.
அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழபிற்கு 59 ரன்களை எடுத்துள்ளது. இதில் உஸ்மான் கவஜா 30 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதையடுத்து 129 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.