NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மித் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 27 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும், 33 ரன்களில் டிராவிஸ் ஹெட்டும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோஷ் இங்கிஸ் 14 ரன்களையும், டிம் டேவிட் 8 ரன்களையும் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 10.4 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 13 ரன்களிலும், வில் யங் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்டும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - மார்க் சாப்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இறுதிவரை போராடிய கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 40 ரன்களையும், மார்க் சாப்மேன் 17 ரன்களையும் சேர்த்த போதிலும் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று ஒயிட் வாஷ் செய்துள்ளது.