ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்லாட்டர் கைது!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர். கரோனா பரவல் அதிகமாக இருந்தநேரத்தில் இந்தியாவிலிருந்து எந்த ஆஸ்திரேலியர்களும் வருவதற்கு தடை விதித்து பிரதமர் மோரிஸன் உத்தரவிட்டார். பிரதமர் மோரிஸனின் உத்தரவை கடுமையாக விமர்சித்த ஸ்லாட்டர் பிரதமர் உங்கள் கரங்களில் ரத்தம்படிந்துள்ளது என காட்டமாக விமர்சித்தார்.
தற்போது 51 வயதாகும் ஸ்லாட்டர் மீது குடும்ப வன்முறை சட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டு, மான்லி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 12ஆம் தேதி குடும்ப வன்முறையில் ஸ்லாட்டர் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த 12ஆம் தேதி குடும்ப வன்முறையில் மைக்கேல் ஸ்லாட்டர் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, கிழக்குப் புறநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து ஸ்லாட்டர் புதன்கிழமை காலை 9.20 மணிக்கு கைது செய்யப்பட்டு மான்லி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லேட்டர் மீது யார் புகார் அளித்தது, என்ன மாதிரியான புகார்கள் ஆகியவை குறித்து அவரின் வழக்கறிஞரும், ஊடக மேலாளரும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கடந்த 1993 முதல் 2000 ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் மைக்கேல் ஸ்லாட்டர். இதுவரை 74 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகளில்விளையாடியுள்ள ஸ்லாட்டர் 5,312 ரன்கள் குவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மைக்கேல் ஸ்லாட்டர் பல்வேறு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,ஸ்கை ஸ்போர்ட்ச் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.