ஐசிசி டி20 தரவரிசை : அபார வளர்ச்சியில் மிட்செல் மார்ஷ்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தியில் முடிவடைந்தது. 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 13 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இவர் இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
அதேசமயம் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன், பேட்டிங் தரவரிசையில் 18ஆவது இடத்தையும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
மேலும் பேட்டிங் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 15 இடங்கள் முன்னேறி 45 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.