சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்!

Updated: Mon, Jun 02 2025 12:42 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக அறியப்படுபவர் கிளென் மேக்ஸ்வெல். கடந்த 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது முதல் கோப்பையை வென்றது வரையிலும் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேப்டன் பாட் கம்மின்ஸை ஒருமுனையில் நிறுத்தி மறுபக்கம் தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் பரபரப்பான அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார் கிளென் மேக்ஸ்வெல். 

அந்த வெற்றியின் காரணமாகவே ஆஸ்திரேலிய அணியால் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற முடிந்ததுடன், கோப்பையையும் வென்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல், இன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய கிளென் மேக்ஸ்வெல், “என்னுடைய உடல்நிலை நிலைமைகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்த்து அணியை கொஞ்சம் ஏமாற்றுவது போல் உணர்ந்தேன். அதனால் இதுகுறித்து நன் ஆஸ்திரேலிய தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் பேசினேன். மேலும் நாம் முன்னோக்கி செல்ல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டேன். நாங்கள் இருவரும் 2027 உலகக் கோப்பையைப் பற்றிப் பேசினோம்.

அப்போது நான் அவரிடம், ‘அடுத்த உலகக்கோப்பை தொடரில் நான் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. அதனால் என்னுடைய இடத்தில் சரியான வீரரை தேர்வு செய்து, அந்த நிலையை அவர்களுக்கே உரியதாக மாற்றிக்கொள்ள திட்டமிடத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று கூறினேன். மேலும் எனது இடத்தை நிரப்ப அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் என்னால் முடிந்தவரை நான் இந்த இடத்தை யாருக்கும் கொடுக்க போவதில்லை என்று கூறி இருந்தேன். 

ஆனால் ஓரிரு தொடர்களுக்கு மட்டும் இடம்பிடித்து சுயநல காரணங்களுக்காகவிளையாட விரும்பவில்லை.அவர்கள் மிகவும் தெளிவான திசையில் நகர்கிறார்கள், எனவே இது அடுத்த உலகக் கோப்பையில் அணி எதை வழிநடத்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த பார்வையை அவர்களுக்கு வழங்குகிறது. அந்த திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணியில் என்னுடைய தருணத்தைப் பெற முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறிவுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 149 போட்டிகளில் விளையாடி, அதில் பேட்டிங்கில் ஒரு இரட்டை சதத்துடன் 4 சதங்களையும், 23 அரைசதங்களையும் விளாசி 3990 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 77 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதிலும் முக்கிய பங்காற்றிவுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை