மகளிர் ஆஷஸ் 2023: பெத் மூனி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஷோபி டங்க்லி அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மறுபக்கம் டேனியல் வையட் 7 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 3 ரன்களிலும், நாட் ஸ்கைவர் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோபி டங்க்லி அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட்டும் 29 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்துவந்த எமி ஜோன்ஸ் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜெஸ் ஜோனசென் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - தஹிலா மெக்ராத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தஹிலா மெக்ராத் 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் 31 ரன்களுக்கு, கிரேஸ் ஹாரிஸ் ரன்கள் ஏதுமின்றியும், எல்லிஸ் பேர்ரி 7 ரன்களுக்கும், சதர்லேண்ட் 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.