நான் சிறப்பாக பந்துவீச இவர்கள் தான் காரணம் - ஆவேஷ் கான்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இந்து தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பந்த் 44 ரன்களையும், ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
கடந்த சில போட்டிகளாகவே பந்துவீச்சில் சொதப்பி வந்த அவர் நேற்றைய 4 ஆவது போட்டியில் இடம்பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் விளையாடிய அவர் ஆட்டநாயகன் விருதினை பெற்றது அனைவரையும் வியக்க வைத்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய அவர், “தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு போட்டிகளாக என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் என்னுடைய பலத்தை சரியாக கனித்து சரியான இடத்தில் பந்து வீசினேன். என்னுடைய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அவர்கள் இருவரும் என்னிடம் வந்து என்னை தொடர்ந்து விளையாட வைப்பேன் என்று உறுதி அளித்தார்கள்.
அதோடு அவர்கள் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் தான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது அடுத்த போட்டியிலும் இதேபோன்று நான் சிறப்பாக பந்து வீசுவேன்” என தெரிவித்துள்ளார்.