தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!

Updated: Sat, Apr 13 2024 16:21 IST
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி! (Image Source: Google)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும், அர்ஷத் கான் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் டேவிட் வார்னர் 8 ரன்களுக்கும், பிரித்வி ஷா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த அறிமுக வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் - ரிஷப் பந்த் இணை அதிர்டையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஜேக் ஃபிரெசர் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் 7ஆம் வரிசையில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஆயூஷ் பதோனி அரைசதம் அடித்ததன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆவது வீரராக களமிறங்கி அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தற்போது ஆயூஷ் பதோனி சமன்செய்துள்ளார். 

 

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 7ஆம் வரிசையில் களமிறங்கி 2 ஐபிஎல் அரைசதங்களை அடித்திருந்தார். அந்தவகையில் நேற்றைய போட்டியில் ஆயூஷ் பதோனியும் 7ஆம் வரிசையில் களமிறங்கியதுடன் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார். இப்பட்டியலில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் 5 அரைசதங்களை விளாசி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை