எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கண்டி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - தனுகா டபரே தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாரிஸ் 7 ரன்களிலும், டபரே 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சஹன் ஆராச்சிகேவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த தினேஷ் சண்டிமல் - கேப்டன் வநிந்து ஹசரங்கா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமல் 38 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வநிந்து ஹசரங்கா 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆசிஃப் அலி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதனைத்தொடர்ந்து இறுதியில் அதிரடி காட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பி லௌவ் கண்டி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. கலே தரப்பில் லஹிரு குமாரா, சோனல் தினுஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கலே அணிக்கு லிட்டன் தாஸ் - லசித் குருஸ்புலே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களின் பார்ட்னர்ஷிப் அதிகநேரம் நீடிக்கவில்லை. இதில் குருஸ்புலே 14 ரன்களிலும், லிட்டன் தாஸ் 25 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சோஹன் டி லிவேராவும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களுக்கும், சோனல் தினுஷா 28 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். கண்டி அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா, டி சில்வா, முகமது ஹஸ்னைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பி லௌவ் கண்டி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் கலே டைட்டன்ஸை வீழ்த்தி, எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.