விராட் கோலியை முந்திய பாபர் ஆசாம்!
மூல்தான் நகரில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது. 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில்5 விக்கெட்டுகளை இழந்து306 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் ஆசாம் அபாரமாக ஆடி சதம் அடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது 17 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். 2017ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் ஆட்டத்தில் கோலி இந்த சாதனையைச் செய்தார்.
இந்நிலையில் கோலியின் சாதனையை முறியடிக்க பாபர் ஆசாமுக்கு 98 ரன்கள் தேவைப்பட்டது. அந்தவகையில் நேற்று பாபர்ஆசாம் சதம் அடித்ததன் மூலம் கோலியின் சாதனையை பாபர் தகர்த்தார். பாபர் ஆஸம் 13 இன்னிங்ஸ்களில் 1005 ரன்கள் சேர்த்து ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
பாபர் ஆசாம் 91.3 சராசரியும், 103.71 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், இந்த ஆயிரம் ரன்களில் 6 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
ஐசிசி ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தில் உள்ளார். 87 ஒருநாள் போட்டிகளில் ஆடிய பாபர் ஆசாம் 4364 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 17 சதங்கள், 18 அரைசதங்கள் அடங்கும்