பாபர் ஆசாம் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - ஜேசன் கில்லெஸ்பி!

Updated: Tue, Sep 03 2024 09:23 IST
Image Source: Google

பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. பின்னர் தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் ஆகா 54 ரன்களும் அடித்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அணியில் லிட்டன் தாஸ் சதமடித்தும், மெஹிதி ஹசன் அரைசதம் கடந்தும் அசத்த அந்த அணி 262 ரன்களைச் சேர்த்தது. 

இதில் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 138 ரன்களையும், மெஹிதி ஹசன் மிராஸ் 78 ரன்களையும் சேர்த்தனர்.பாகிஸ்தான் அணியில் குர்ராம் ஷஷாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  பின்னர் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்கதேசத்தின் ஹசன் மெஹ்மூத், நஹித் ராணா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், ஆகா சல்மான் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் சேர்த்தனர்.

வங்கதேச அணி சார்பில் ஹசன் மெஹ்மூத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பாகிஸ்தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இத்தொட்ரில் பாகிஸ்தான் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் பாபர் ஆசாம் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றி வருகிறார். அதிலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 16 இன்னிங்ஸ்களாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவர் மீதும், அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில், பாபர் ஆசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும், அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாபர் ஒரு தரமான வீரர் மற்றும் சில நல்ல தொடக்கங்களைப் பெற்றுள்ளார். எங்கள் சில வீரர்களைப் போலவே, அவரும் சிறப்பான தொடக்கத்தை ரன்களாக மாற்ற முடியவில்லை. அவர் ஒரு சிறந்த வீரர், அவர் சிறப்பாக செயல்படுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை