ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!

Updated: Wed, Dec 20 2023 20:19 IST
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்! (Image Source: Google)

உலகக்கோப்பை தொடருக்கு பின் மீண்டும் கிரிக்கெட் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி அதன்படி தென் அப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடிய பின், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 1-1 என்ற நிலையில் சமன் செய்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 2 போட்டிகளிலும் சேர்த்து 156 ரன்களை விளாசினார். இதன் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பவுலராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் 4 போட்டிகளில் விளையாடி ஆதில் ரஷீத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கேற்றியுள்ளார். 

இதனால் டி20 பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஆதில் ரஷீத் 3ஆவது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகினார். இதனால் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஷுப்மன் கில், கீழே தள்ளப்பட்டுள்ளார். அதன்படி 810 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சுப்மன் கில் தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மீண்டும் முதலிடத்திற்கு 824 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார். அதேபோல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன் கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 16ஆவது இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை