பாபர் அசாம் முதல் சதம்; தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது பாகிஸ்தார்!

Updated: Thu, Apr 15 2021 11:24 IST
Babar Azam's maiden T20I ton, a record chase for Pakistan (Image Source: Google)

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், நான்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன், மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  இருவரும் அரை சதம் கடந்தனர். 

இதில் 31 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 63 ரன்கள் குவித்த மார்க்ரம், முகமது நவாஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்துவந்த ஜார்ஜ் லிண்டே 22 ரன்களில் வெளியேறினார். 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 55 ரன்கள் குவித்திருந்த மாலனின் விக்கெட்டை முகமது நவாஸ் கைப்பற்றினார். அடுத்துவந்த வென் டெர் டௌசன் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 34 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அணியின் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினார். குறிப்பாக, கேப்டன் பாபர் அசாம் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல் முகமது ரிஸ்வான் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் 49 பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பின்னர்  59 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 122 ரன்கள் குவித்த அசாம், வில்லியம்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால், 18 ஓவர்களிலேயே  பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. 

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 73 ரன்களுடனும், ஃபகர் சமான் 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை