ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்திய டுவைன் பிராவோ!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடந்த 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/7 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 211 என்ற பெரிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்களும் எடுத்தனர். அந்த நல்ல தொடக்கத்தை அபாரமாக பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக 23 பந்துகளில் 55* ரன்களை குவித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார்.
அந்த போட்டியில் 211 என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி பேட்ஸ்மென்கள் ஆரம்பம் முதலே சென்னை பவுலர்களை கருணையே இல்லாமல் அடித்தனர். அதற்கு மத்தியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ட்வைன் பிரிடோரியஸ் முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 31 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ தன் பங்கிற்கு 4 ஓவர்களை வீசி 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இருப்பினும் ஏனைய பவுலர்கள் ரன்களை கொடுத்த காரணத்தாலும் ஒருசில முக்கிய காட்சிகளை கோட்டை விட்ட காரணத்தாலும் சென்னை கடைசிவரை பரிதாபமாக தோல்வி அடைந்தது.
அந்த போட்டியில் 1 விக்கெட் எடுத்த டுவைன் பிராவோ ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்காவின் வரலாற்று சாதனையை உடைத்து புதிய சரித்திர சாதனை படைத்தார். கடந்த 2009 – 2019 கால கட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்த லசித் மலிங்கா அந்த அணிக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது விக்கெட் எடுத்துக் கொடுத்த அவர் அந்த அணிக்கு தனி ஒருவனாக கோப்பையை வென்று கொடுத்தார் என்று கூறலாம்.
மேலும் தனது அபார யார்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட அவர் மொத்தம் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்களை எடுத்து இதுநாள் வரை ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்திருந்தார். கடந்த வருடம் அவர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 150 இன்னிங்ஸ்களில் 171* விக்கெட்டுகளை எடுத்துள்ள டுவைன் பிராவோ மலிங்காவின் ஆல்-டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மலிங்காவை போலவே கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய டுவைன் பிராவோ 2011 வரை அந்த அணிக்காக 26 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் இதுவரை 128* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதற்கு இடையில் கடந்த 2016-ஆம் ஆண்டு குஜராத் அணிக்காகவும் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகளை பதிவு செய்து மொத்தம் 171* விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார்.
மலிங்காவை போலவே கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் திறமை படைத்த பிராவோ சென்னை அணிக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இன்றும் விளையாடி வருகிறார். இதில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களுக்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை லசித் மலிங்கா ஒரு முறை வென்றுள்ள நிலையில் ப்ராவோ 2 முறை (2013, 2015) வென்றுள்ளார். இந்நிலையில் தனது ஆல்-டைம் சாதனையை உடைத்த ட்வைன் பிராவோவை லசித் மலிங்கா மனதார பாராட்டி உள்ளார்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிராவோ ஒரு சாம்பியன். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா. இதுபோல நிறைய உங்களைத் தேடி வரும் இளமையான மனிதரே” என பாராட்டினார்.
தற்போது 38 வயது நிரம்பிய பிராவோவின் பந்துகளில் இன்னும் இளமை அப்படியே இருக்கிறது என்பதாலேயே மலிங்கா அவரை இளமையான மனிதர் என பாராட்டியுள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக 575* விக்கெட்டுகளை எடுத்துள்ள பிராவோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.