BAN vs AFG, Asia Cup 2023: ஆஃப்கானை வீழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்!

Updated: Sun, Sep 03 2023 22:52 IST
BAN vs AFG, Asia Cup 2023: ஆஃப்கானை வீழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் - மெஹதி ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 28 ரன்களை எடுத்திருந்த நைம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெஹிதி ஹசனுடன் நஜ்முல் ஹொசைன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சையும் நாலாபுறமும் சிதறடித்தனர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 112 ரன்களை எடுத்திருந்த மெஹிதி ஹசன் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பா, மறுபக்கம் 9 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசியிருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 112 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், குல்புதின் நைப் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சிறுசிறுக உயர்ந்தது. இதில் இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்த நிலையில், 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 75 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதற்கிடையில் அதிரடி வீரர்களான நஜிபுல்லா ஸத்ரான் 17 ரன்களுக்கும், முகமது நபி 3 ரன்களுக்கும், குலபுதின் நைப் 15 ரன்களிலும், கரிம் ஜானத் ஒரு ரன்னுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் சிக்சர் விளாசிய நிலையில், எதிர்பாராத விதமாக ஹிட்விக்கெட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இறுதிவரை போராடியது ரஷித் கான் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் தஸ்கின் அஹ்மது 4 விக்கெட்டுகளையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை