BAN vs AFG, Only Test: ஆஃப்கானிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்!

Updated: Thu, Jun 15 2023 20:33 IST
BAN vs AFG, Only Test: Bangladesh keep piling on the runs and have extended their lead to over 350! (Image Source: Google)

வங்கதேசம் சென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மிர்பூரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின் இணைந்த மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ரன் மழை பொழிந்தனர். 

இதில் ஹசன் ஜாய் அரைசதம் கடந்தார். நஜ்முல் ஹொசைன் சதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 212 ரன் சேர்த்த போது ஹசன் ஜாய் 76 அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மோமினுல் ஹக்கும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அபாரமாக விளையாடிய நஜ்முல் ஹொசைன் 146 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 362 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷ்பிக்கூர் ரஹிம் 41 ரன்களுடனும், மெஹிதி ஹசன் 43 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முஷ்பிக்கூர் ரஹிம் 47 ரன்களிலும், மெஹிதி ஹசன் 48 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் நிஜாத் மசூத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களால வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக நசிர் ஜமால் 35 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஸஸாய் 36 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் எபோடட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், ஷொரிபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 236 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்த் தொடங்கிய வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸகிர் ஹசன் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸகிர் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இருவரும் தலா 54 ரன்களைச் சேர்த்துள்ளனர். இதையடுத்து 370 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை